Saturday, February 2, 2013

இணையம் எப்படி செயல்படுகிறது? விரிவான தகவல்கள்..!



நாளொரு மேனியும், பொழுது ஒரு வண்ணமுமாக தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் பல பரிமாணங்களைக் கடந்துதான் இந்நிலையை எட்டியிருக்கிறோம் என்பதை நாம் மறக்க இயலாது.. 
what is internet

இன்டர்நெட் என்றால் என்ன?
இன்றையப் பதிவான இணையம் இயங்குவது எப்படி? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்...

ஏதோ என்னிடத்தில் கணினி இருக்ககிறது.. இணைய வசதியை அளிக்க பல நிறுவனங்கள்(Internet Provider) இருக்கிறது.. விண்ணப்பித்த உடனே இணைய இணைப்பும்(Internet) கிடைத்துவிடுகிறது.. பிறகென்ன இணையத்தில் உலவ வேண்டிதுதான்.. உலவுதல்.. உலவுதல்.. மேலும் இணைய உலவுதல்தான்(Internet Browsing).

வேண்டியதைத் தேடிப் பெற... வேண்டாத்தையும் சென்றுப் பார்க்க... கல்வி பயில.. கற்றதை பலருக்கும் தெரிவிக்க... இப்படி பலதையும் செய்து பயன்பெற்றுக்கொண்டிருக்கிறோம்.. 

ஆனால் இந்த இணையம் எப்படி செயல்படுகிறது?.. எங்கிருந்து இத்தகைய கோடிக்கணக்கான தகவல்கள் கிடைக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடினால் இணையம் எப்படி செயல்படுகிறது? என்பதை அறிந்துகொள்ளலாம்.

ஆம் நண்பர்களே.. இணையம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன தெரியுமா? இணைப்பது என்பதுதான்..ஒருவரை.. இருவரை.. ஏன் பல்லாயிரக்காணவர்களை இணைப்பதுதான் இணையம்.. இன்னும் ஆழ நோக்கினால் எங்கெங்கோ, உலகத்தில் ஏதோ மூலையில் இருக்கும் கணினியிலுள்ள (server) தகவல்களை எடுத்து வந்து நம் கணினியுடன் இணைப்பதுதான் இணையம்.  நாம் உள்ளிட்ட முகவரியுடைய தளத்தை  நமக்கு உடனுக்குடன் வழங்குவதுதான் இணையம்.. இவ்வாறு ஒரு பக்கத்தை உள்ளிடப் பயன்படும் கணனியையும். நான் தேடிய பக்கத்தை வைத்திருக்கிற கணினியையும் இணைப்பதுதான் இணையம். உலகத்திலுள்ள இப்படிப்பட்ட server computer, personal computer என பலவாறு இருக்கும் கணினி, மற்றும் வழங்கிகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தி வேண்டிய பக்கங்களையும் தகவல்களையும் பெற்றுத்தருவதே இணையம். இவற்றை ஆங்கிலத்தில் இதை Internet என்பார்கள். 

இணையம் எவ்வாறு செயல்படுகிறது? 
(? How does the Internet work?)
உங்கள் கணினியில் இணையத்தைப் பயன்படுத்த என்ன செய்வீர்கள்? கணினியை உயிர்ப்பித்து அதிலுள்ள Browser ஒன்றினை இயக்கி.. அதிலுள்ள Address Bar -ல் ஏதேனும் தளத்தின் URL கொடுப்பதன் மூலம் இணையத்தை அடைகிறீர்கள் அல்லவா? இது எப்படி நடக்கிறது. அதாவது நாம் URL - கொடுத்தவுடன் go பட்டனையோ அல்லது Enter பட்டனையோ தட்டிவிட்டால் நாம் கொடுத்த பக்கமானது திறந்துகொள்கிறது.. இந்தப் பக்கம் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? எதனால் வருகிறது? ஏன் வருகிறது? 
working method of internet connection
இணையம் செயல்படும் விதம்.

இதெல்லாம் கம்ப்யூட்டர் செய்யும் மாயம் என்கிறீர்களா? ம்ம்.. நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான். ஆனால் கம்ப்யூட்டர் என்ன மாயாஜால வித்தையா கற்று வைத்திருக்கிறது.. இல்லை.. அது நம்மைப்போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சாதனம். அவ்வளவே.. இதற்கு மாயாஜாலமும் தெரியாது.. மண்ணாங்கட்டியும் தெரியாது.. 

சரி..பதிவிற்கு வருவோம்.. நீங்கள் இணையத்தை நாட Browser கிளிக் செய்து url கொடுக்கிறீர்கள் அல்லவா? இந்த Browser -ஐ கிளையண்ட் என்பார்கள்.. இந்த பிரவுசர்.. எந்த நிறுவனத்தினுடையதாகவும் இருக்கலாம். உம். நான் அடிக்கடிப் பயன்படுத்தும், firefox, Google Chrome, Opera, Internet Explorer போன்றவை. 

இந்த கிளையண்ட்கள் என்ன செய்கின்றன தெரியுமா? நாம் உள்ளிட்ட URL நமக்கு இணைய இணைப்பு வழங்கிய ISP Server-க்கு அனுப்புகிறது.. இணைப்பு வழங்கிய சர்வரா? குழம்ப வேண்டாம்.. உங்களுக்கு இணைய இணைப்பைப் பெற்றுத் தரக்கூடிய BSNL, Airtel, Relience, Aircel இதுபோன்ற நிறுவனங்களின் சர்வரைத்தான் ISP Server- என்கிறோம். 

இந்த சர்வரானது தான் இணைக்கப்பட்ட மற்றொரு சர்வருடன் தொடர்புகொள்கிறது. அந்த சர்வரானது மற்றொரு சர்வருடன் தொடர்புகொள்கிறது.. இப்படி சங்கிலித்தொடராக இறுதியில் நாம் தேடும் தகவலடங்கிய சர்வருடன் இணைகிறது. இவ்வாறு நாம் உள்ளிட்ட URL இருக்கும் சர்வரை அடைகிறது. இவ்வாறு நாம் உள்ளிட்ட தகவலானது Very High Speed network என்னும் வழியில் வேகமாக உரிய சர்வரை வேகமாக சென்றடைகிறது. 

உரிய சர்வரை அடைந்ததும் அதிலுள்ள தகவல்கள் சிறு சிறு பொட்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மீண்டும் அதே வழியில் தகவல்கள் நீங்கள் இணைந்திருக்கும் ISP , உங்களுக்கு இன்டர்நெட் சர்வீஸ் வழங்கும் சர்வருக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து உங்களுடைய கணினிக்கு அந்த வலைத்தளத்தின் பக்கம் வந்தடைகிறது. நீங்கள் பிரௌசரில் உள்ளிட்ட தகவலனைத்தும் இவ்வாறுதான் உங்களுக்கு வந்தடைகிறது. இவ்வாறு நீங்கள் உள்ளிட்ட தகவலைப் உரிய சர்வரைச் சென்று மீண்டும் தகவலைப் பெற்று மீண்டும் உங்கள் கணினிக்குத் திரும்பும் நேரம் ஒரு சில விநாடிகளே...!

நாம் உள்ளிட்ட URL - ஐ கணினி எப்படி புரிந்துகொள்கிறது?

கணினிக்கு எழுத்துகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை.. கணினி என்றாலே 0,1 என்ற முறைதான்.. இன்னும் சொல்லப்போனால் கணினி ஆன், ஆப் என்ற இருமுறையில்தான் புரிந்துகொள்கிறது. அதாவது true or false.. ஒன்று அல்லது பூஜ்ஜியம்..இதைப்பற்றித் தெளிவாகப் படிக்க Unicode எழுத்துருவிற்கு நன்றி என்ற பதிவைப் படிக்கவும். 

கணினிக்கு நீங்கள் உள்ளிட URL படிக்கத் தெரியாது என்பதால் இவற்றை கணினி புரிந்துக்கொள்ள கூடிய மொழியில் மாற்றி அமைக்கவேண்டியது அவசியம். இதற்கு protocol என்ற முறை பயன்படுகிறது. இந்த புரோட்டோகால் என்பது இரண்டு கணினிகளுக்கிடையாயான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முறையாகும். HTT, FTP, SMTP, WiFi, TCPIP என பல வகைகளாக இருக்கிறது. பொதுவாக TCP, IP ஆகியவைகளையே பெரும்பான்மையாக பயன்படுத்துகிறோம். 

இணையத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு IP Address தரப்படுகிறது. இந்த IP அட்ரசானது நம்முடைய முகவரியைப் போல எழுத்தில் இருக்காது. இவ்வாறு IP ADDRESS எண்களாக இருக்கும். இந்த எண்கள் 0 தொடங்கி 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். உதாரணமாக யாஹூ தளம் உள்ள சர்வரின் IP Address 82.248.113.14 ஆகும். இந்த எண் இந்த தளத்தின் நிலையான எண் ஆகும். 

நீங்கள் ஒவ்வொரு முறையும் இணையத்தில் இணையும்போது ISP உங்கள் கணினிக்கென ஒரு தற்காலிக IP Address கொடுக்கப்படும். நிரந்தரமில்லாத இந்த IP Address ஆனது நீங்கள் இணையத்தில் இணைந்திருக்கும் வரை மட்டுமே செயல்படும். இணையத்தை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் இணையத்தை தொடங்கும்போது மீண்டும் புதிதாக IP Address உங்கள் ISP வழங்கும். காரணம் உங்களைப் போன்றவர்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு உங்களுடைய ISP நிறுவனத்துடன் இணைந்திருப்பார்கள். ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களை இன்டர்நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் இவ்வாறு IP அட்ரஸ் நிலையாக கொடுக்காமல், அவ்வப்போது IP ADDRESS கொடுக்கப்படுகிறது. 

இந்த எண்கள் நான்கு இலக்க எண்களின் தொடராக இருக்கும். ஒவ்வொரு எண்ணையும் ஒரு புள்ளி வைத்து பிரித்திருப்பார்கள். அதாவது இவ்வாறு இருக்கும். 64.233.167.104 இந்த எண்களினால் ஆன முகவரி இணையத்தின் மிக முக்கியமானதாகும். 

ஏனெனில் இந்த முகவரியை வைத்துதான் Internet-ல் வேண்டுகோள் வைத்த கம்ப்யூட்டர் எது? எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல்கள் வரவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். TCP என்பது Transmission Control Protocol என்பதின் குறுக்கமாகும். இது அனுப்பபடும் தகவல்களை சிறு சிறு பொட்டலங்களாக (Pockets)பிரித்து, மீண்டும் சேர வேண்டிய இடத்தில் தகவல்களை மீண்டும் உள்ளவாறே சரியான முறையில் இணைத்து கொடுக்கும். இதுதான் TCP என்று சொல்லப்படுகிற Transmission Control Protocol ன் வழிமுறையாகும்.

எனவேதான் இந்த ஐபி அட்ரஸ் ஆனது மிக முக்கியத்துவம் பெறுகிறது.. வேண்டுகோள் விடுத்த ஐ.பி அட்ரஸ் உடைய கணினிக்கும், தகவல்களை கொடுக்கிற கணிக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக விளங்குவது இணையம். வேண்டுகோள் விடுத்த கணினியையும், வேண்டிய தகவலடங்கிய கணினியையும் அடையாளப்படுத்தவே இந்த IP முகவரிகள். இப்போது தெளிவாக புரந்திருக்கும் என நினைக்கிறேன்.

இந்த வீடியோவைப் பாருங்கள் இன்னும் எளிமையாக விளக்கியிருக்கிறார்கள்...இப்பதிவினுடைய அனைத்து கருத்துகளையும் உள்ளடக்கியுள்ளது இந்த வீடியோ.. தவறாமல் வீடியோவைப் பாருங்கள்.. உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துக்கொள்ளுங்கள். 



இவ்வாறுதான் நாம் இணையத்தில் இணைகிறோம்.. நம்முடைய கணினிக்கு, உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கணினியிலுள்ள தகவல்கள், தரவுகள் நம்மை வந்தடைகின்றன..

குறிப்பு: ISP - INTERNET SERVICE PROVIDER - இணைய இணைப்பு வழங்குநர்.
IP- INTERNET PROTOCOL - இணைய நெறிமுறை
SERVER - வழங்கி (கணினி) - சேவையகம்.

0 comments: