பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் விவரங்களை உங்கள் வாழ்க்கை கல்வெட்டுக்கள் என்று எப்போதேனும் நினைத்ததுண்டா?
அப்படி நினைக்க வைக்ககூடிய அருமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
பாஸ்ட் போஸ்ட்ஸ் என்னும் அந்த தளம் பேஸ்புக் மூலம் உங்கள் கடந்த காலத்தை திரும்பி பார்க்க உதவுகிறது.
அதாவது சென்ற வருடம் இந்த நாளில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நினைத்து பார்க்க வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ்.
வரலாற்றில் இன்று என்று சில நாளிதழ்களும் தொலைகாட்சிகளும் கடந்த கால நிகழ்வுகளை தொகுத்தளிக்கின்றன இல்லையா,அதே போல உங்கள் வாழ்க்கையிலும் கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை திரும்பி பார்க்க நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த தளம்.
கடந்த ஆண்டு இதே நாளின் என்ன செய்தீர்கள் என்று நினைவில் உள்ளதா என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலை சுவாரஸ்யமான வழியில் முன்வைக்கிறது இந்த தளம்.
பேஸ்புக் பயனாளிகள் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும் செயல்களையும் பேஸ்புக் சுவர் வழி செய்திகளாக பகிர்ந்து கொள்கின்றனர் அல்லவா?இவற்றை ஒருவரது வாழ்க்கை பதிவின் கல்வெட்டுக்களாக கருதி தினம் ஒரு செய்தியாக இமெயில் மூலம் பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ்.
இந்த தளத்தில் உறுப்பினரான பின் ஒருவரது பேஸ்புக் சுவர் பதிவுகளில் இருந்து கடத்த கால பதிவுகளில் இருந்து கடந்த ஆண்டு அதே நாளில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் தேர்வு செய்து இமெயில் மூலம் அனுப்படுகிறது.
பேஸ்புக்கில் எல்லோரும் பகிர்ந்து கொள்கின்றனரே தவிர அந்த பதிவுகளை பலரும் திரும்பி பார்ப்பதில்லை.அந்த வசதியை தான் புதுமையான முறையில் இந்த தளம் வழங்குகிறது.
இந்த தளம் மூலம் கடந்த ஆண்டு இதே நாளில் என்ன செய்து கொண்டிருந்தோம் என அறிந்து கொள்ள முடிவது பயனாளிகளுக்கு புதிய அனுபவமாகவே இருக்கும்.டைரியை புரட்டி பார்ப்பது போல பேஸ்புக் வழியே தங்கள் வாழ்க்கை பிளேஷ்பேக்கில் மூழ்கலாம்.
பேஸ்புக் அனுபவத்தை மேலும் பட்டை தீட்டும் வகையில் பேஸ்புக் சார்ந்து பல்வேறு தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் மிகவும் சுவாரஸ்யமானதாக இதனை கருதலாம்.
பேஸ்புக்கின் செல்வாக்கை மீறி அதன் பயன்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்களும் இருக்கின்றன.ஆனால் பேஸ்புக் வெறும் பொழுதுபோக்கு அல்ல என்பதை இது போன்ற தளங்கள் உணர்த்தி வருகின்றன.
இணையதள முகவரி;http://pastposts.com/
0 comments:
Post a Comment